கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 28, 2010

செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டும்: கலைஞர் அறிக்கை


கோவையில் அடுத்த மாதம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரில் ஜுன் மாதம் 23 ந் தேதி முதல் 27 ந் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்திடவும், நேரடியாக ஆய்வு செய்திடவும், கோவை மாநகரில் 2 நாட்கள் தங்கியிருந்தேன்.

மாநாடு தொடர்பான பல்வேறு ஏற்பாடுகளை வகைப்படுத்தியும், முறைப்படுத்தியும் நேர்த்தியான முறையில் செய்வதற்காக அமைச்சர்களின் தலைமையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுடன் நான் நடத்திய கலந்தாலோசனை கூட்டத்தில், இதுவரை மாநாட்டிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், இனி செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் எந்த அளவிற்கு விரைவாகவும், தரத்தோடும் நடைபெறுகின்றன என்பதை எடுத்துக்காட்டின. அமைச்சர்களும், அதிகாரிகளும் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தம்மை முழு அளவில் ஈடுபடுத்திக் கொண்டு, முனைப்போடு பணியாற்றிக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது.

மாநாடு தொடர்பாக பொது அரங்க நிகழ்ச்சிகள், ஆய்வரங்க நிகழ்ச்சிகள், கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் கொடிசியா அரங்கத்தையும் பார்வையிட்டேன். பொது அரங்க நிகழ்ச்சிக்கான பிரம்மாண்டமான பந்தல் மிக அழகாக உருப்பெற்று வருகிறது. பழம்பெரும் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ள 28 ஆய்வரங்கங்களும் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளவிருக்கும் தமிழறிஞர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகின்றன.

கண்காட்சிக்கான ஏற்பாடுகள் வெறும் கண்காட்சியாக மட்டுமில்லாமல், கருத்துக் காட்சியாகவும், காலமெல்லாம் நினைவுகளிலிருந்து விட்டு அகலாத வகையிலும் உருப்பெற்று வருகிறது. பழந்தமிழர் பண்பாடு, நாகரிகம், தமிழிலக்கிய காட்சிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. பழந்தமிழர் வாழ்க்கை முறையை இன்றைய தமிழ் இளைஞர்கள் அறிந்து, உணர்ச்சியும், எழுச்சியும் கொள்ளும்வண்ணம், அவை அமைந்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அதைப்போலவே, ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் ஊர்வலத்திலே ஊர்ந்து செல்லவிருக்கின்ற ரதங்கள் போன்றவை காண்போரைக் கவரும் வண்ணம் உருவாகி வருகின்றன. இவ்வளவு மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் இடையே என் மனதுக்குக் கிலேசம் தருகிற ஒரு காட்சியையும் கோவையிலே காண நேர்ந்தது.

கோவை விமான நிலையம் தொடங்கி, வ.உ.சி. மைதானம் வரை இன்னும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள், பதாகைகள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுக் கொண்டிருப்போரின் உருவங்கள் தாங்கிய "பேனர்கள்'', திகட்டிப் போகும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தன.

இதே காட்சியை முதல் நாளே, கோவை மாநகருக்குச் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினும் கவனித்துக் கண்டித்திருக்கிறார் என்று கேள்வியுற்றேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படவிருக்கிற மாநாடே தவிர, அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சியளித்து விடக் கூடாது என்பதிலே நான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன் என்பதை ஏனோ கோவை மாவட்ட கழக உடன்பிறப்புகள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

கழகக் கொடிகள், பதாகைகளுக்குப் பதிலாக, பொதுமக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில் சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள், பழங்கால மன்னர்களின் திருவுருவங்கள், புலவர்களின் ஓவியங்கள் அழகாக அமைக்கப்படுமானால், அதுவே எனக்கு மட்டுமல்லாமல், மாநாட்டுக்கு வருகிற பல லட்சக்கணக்கான மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நிறைவளிக்கக்கூடிய ஒன்றாகவும், தமிழ் மொழியின் பெருமை, வரலாறு, பண்பாடு இவற்றை விளக்குவதாகவும் இருக்குமென்பதை அனைவரும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment