கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 28, 2010

எல்லோரும் ஒரே குலமாக இருக்க வேண்டும் - முதல்வர் கருணாநிதி



கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த மாதம் (ஜுன்) 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய நோக்குப் பாடலுக்காக முதல்வர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஒலி-ஒளி குறுந்தகடு (சி.டி.) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகட்டின் வெளியீட்டு விழாவும், 2 ஆஸ்கார் விருதுகள் மற்றும் கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு விழாவும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் 15.05.2010 மாலை நடைபெற்றது. விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, ஒலி-ஒளி சி.டி.யை வெளியிட்டார். அவரிடம் இருந்து வயலின் இசை கலைஞர் எல்.சுப்பிரமணியம் முதல் சி.டி.யை பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் பேசியதாவது: நேற்று (14-ந் தேதி) இரவெல்லாம் நான் தூங்கவில்லை. காரணம், நீங்கள் இங்கு கேட்டுக்களித்தீர்களே, அந்த தமிழ்ப் பாடல் படத்தை ஒரு முறைக்கு இரு முறை அல்ல; இரு முறைக்கு மூன்று முறை அல்ல; பலமுறை அதைப் போடச் சொல்லிப் பார்த்துப் பார்த்து, அதே நினைவோடு நான் துயில் கொள்ளாமலேயே விடியற்காலை வரையில் விழித்திருந்து இப்போது இங்கே இந்த நிகழ்ச்சியிலே உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். நான் இந்த பாடலை எழுதியபோது கனிமொழியிடத்திலே ஒரு உறுதி பெற்றுக்கொண்டேன். அந்த உறுதியைப் பெறும்போது, பக்கத்திலே மு.க.ஸ்டாலின், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் - இவர்களெல்லாம் இருந்தார்கள். அந்த உறுதி என்னவென்றால், "நம்முடைய தம்பி ரஹ்மான் இந்த பாடலுக்கு இசை அமைப்பதற்காக ஒத்துக்கொண்டால், அதைப் பெற்றுத்தருகின்ற வரையில், நீ ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என்பதுதான். அந்த ஒத்துழைப்பு தரப்பட்ட காரணத்தால், இன்றைக்கு இந்த மாமன்றத்தில் ரஹ்மானுடைய இசையை - நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து - நீங்களெல்லாம் பருகக் கூடிய ஒரு சூழ்நிலை, அரிய வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்தது; எனக்கும் கிடைத்தது. நான் எழுதிய பாடல்தான். ஆனால், தமிழகத்தினுடைய புலவர் பெருமக்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்கு பின்னர் வந்த கடைச்சங்க காலம், இடைச்சங்க காலம் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற அந்த பல்வேறு காலக் கட்டங்களிலே வந்த பெருமக்கள், கம்பர் காலம் வரையிலே, காளமேகம் காலம் வரையிலே எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்கவழக்கங்களை - இவைகளையெல்லாம், ஒரு பாட்டிலே அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்ப்பாடு கொண்டது என்பதை நான் நன்றாக அறிவேன். அதை நான் எழுதுகின்ற நேரத்தில் என்னருகிலே இருந்த புலவர் பெருமக்கள், பாவலர் பெருமக்கள், தமிழ்ப் பெருமக்கள் எல்லாம், "இது வெற்றிகரமான ஒரு பாடலாக வரவேண்டும்'' என்கின்ற பெரும் ஆவலுடன் பெரிதும் எதிர்பார்த்தார்கள். அதை நான் எழுதும்போது ஏற்பட்ட உணர்வு எத்தகையது என்பதை நான் ஒருவன்தான் அறியமுடியும். ஏனென்றால், அந்த உணர்வோடு ஒன்றிக்கலந்து ஏறத்தாழ 70 ஆண்டுகளாக இருந்த - இன்றைக்கு 87-வது ஆண்டு வருகிற ஜுன் திங்கள் 3-ம் நாள் தொடங்குகிறது என்றாலும், இந்த 87 ஆண்டுகளிலே சின்னஞ்சிறு வயதில் கிட்டத்தட்ட ஒரு 10, 12 ஆண்டுகள் போக, மிச்சமுள்ள ஆண்டுகளெல்லாம் "தமிழ், தமிழ்'' என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன. அதனால்தான், யார் ஒருவர் "தமிழ்'' என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன். அவர்களோடு ஒன்றிக் கலந்திடுவேன். உணர்வுகளை மதிப்பேன். அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை வாழ்த்துவேன். ரஹ்மானை போன்ற இளைஞர்கள், எப்படி முன்னேறினார்கள் என்பதை எண்ணிப்பார்த்தாலே அவருடைய இந்த வரலாற்றை, வாழ்க்கையை சிந்தித்துப் பார்த்தாலே, ஒவ்வொரு இளைஞனும் தான் முயற்சித்தால், எண்ணினால், சிந்தித்தால், உழைத்தால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை பெற முடியும். அவருடைய நம்பிக்கை, அவரது இடைவிடாத முயற்சி - இதுதான் காரணம். இது யாரோ ஒரு சிலருக்கு மாத்திரமல்ல, சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தக் கூடிய வரலாற்று நிகழ்ச்சிதான் ரகுமானுடைய வரலாற்று நிகழ்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. ரகுமானுக்கும், எனக்கும் அதிகம் பழக்கமில்லை. பழக்கம் இல்லாவிட்டால் என்ன? எனக்கும், அவருக்கும் உள்ள ஒரே தொடர்பு. அவரும் தமிழன், நானும் தமிழன் என்ற அந்த தொடர்புதான். நான் வியந்தேன், இந்த பாடலைக் கேட்டபோது. முதலிலே இந்த பாடலில் வருகின்ற வரிகளை நீங்கள் மறந்திருக்க முடியாது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று தொடங்குகிறது. எல்லா உயிரும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள். அது பிறந்த பின் என்ன என்பதுதான் இன்றைக்குள்ள பிரச்சினை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றாலும் கூட, பிறந்த பிறகு ஒரு இனமாக, ஓர் இனத்தின் சின்னமாக வாழ வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலேதான் இந்த பாடல் அமைந்திருக்கின்றது. அந்த பாடலை இசையோடு, படக்காட்சிகளோடு நீங்கள் இங்கே பார்த்ததைப் போல், தொடர்ந்து இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையிலே நடக்கின்ற வரையில் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படும். இன்னும் சொல்லப்போனால், கோவை மாநாடே இந்த பாடலோடுதான் ஆரம்பமாகப் போகிறது..." என்றார்.

No comments:

Post a Comment