கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 28, 2010

என்னிடம் கள்ளக் காதல் கொண்டவர் ஆர் எம் வீரப்பன்! – முதல்வர் கருணாநிதி பேச்சு


எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ்- தாரிணி திருமணம் சென்னையில் நடந்தது. திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்துப் பேசியதாவது:

அருளாளர் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா, நம்முடைய இல்லத்தில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி என்கிற உணர்வோடுதான், நாமெல்லாம் இங்கே கலந்து கொண்டிருக்கிறோம்.

ஆர்.எம்.வீ. அவர்களுக்கும், எனக்கும் உள்ள தொடர்பு நீண்டகாலத் தொடர்பு. சுருக்கமாகச் செல்ல வேண்டுமேயானால், மறைந்தும், மறையாத என்னுடைய ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் என்னோடு கொண்டிருந்த நட்பை, இன்று வரையிலே என்னிடத்திலே அவர் கொண்டிருக்கின்ற அன்பைப் போற்றிப் புகழ்ந்து இங்கே வாழ்த்தியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள்.

1945ல் குடியரசு அலுவலகத்தில் நான் தந்தைப் பெரியார் அவர்களிடத்திலே குடியரசு பத்திரிகையினுடைய துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று, பணியாற்றச் சென்ற அந்தக் காலந்தொட்டு, எனக்கும் ஆர்.எம்.வீ.க்கும் நெருக்கமான நட்பு அரும்பி, மலர்ந்து, இன்றைக்கு மணம் வீசுகின்ற வகையில், மண விழாவினை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

எனக்கும், ஆர்.எம்.வீ-க்கும் என்றைக்குமே பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். நம்முடைய திருமாவளவன் அவர்கள் பேசும்போது, கலைஞரும், ஆர்.எம்.வீ. எதிர்ப்பது என்றாலும் அதில் உறுதியாக இருப்பார்கள்; நட்பு பாராட்டுவது என்றாலும், அதிலும் உறுதியாக இருப்பார்கள் என்று சொன்னார். அதிலே ஒரு ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

அவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்திலேகூட, என்னிடத்திலே கள்ளக்காதல் கொண்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலே இயங்கிய அதிமுகவிற்கும் இடையில் சில பிரச்சனைகள் தோன்றும்போதெல்லாம், எனக்கு ஒரு ரகசியக் கடிதம் வரும்.

இன்னும் சொல்லப்போனால், எங்களிடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல்- 1971ம் ஆண்டில் ஏற்பட்டபோது, என்னுடைய இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக- அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து இயங்கக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும்- பிரிக்கின்றவர்கள் சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் ஒன்றுபட்டு, தமிழகத்திற்காகப் பணியாற்றுங்கள் என்று கண்ணீர் கலந்து தன்னுடைய கவலையைத் தெரிவித்தவர்களிலே மிக முக்கியமானவர் என்னுடைய அன்பிற்குரிய ஆர்.எம்.வீ. என்று சொன்னால், இது வரலாற்றுப் புத்தகத்திலே பதிய வைக்க வேண்டிய ஒரு பேருண்மையாகும்.

பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே பிணக்கு விளைந்தபோதெல்லாம், அதை சரி செய்யப் பாடுபட்டவர் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது.

ஏன் அவருக்கு அந்தக் கவலை இருந்தது என்றால், நான் குறிப்பிட்டேனே 1945ம் ஆண்டு- அந்த 1945ம் ஆண்டிலே நாங்கள் இருவரும், இணைந்திருந்து உழைத்த இடம், எங்களுடைய ஆரம்பப் பள்ளிக் கூடம் தொடங்கிய இடம் ஈரோடு.

அந்த ஈரோடு, தந்தைப் பெரியாருடைய குருகுலம். அது உருவாவதற்குக் காரணம், அங்கிருந்து கிளம்பிய உணர்வுகள், நாடெங்கும் பரவியதற்குக் காரணம், திராவிட இயக்கத்தைச் செழிப்படையச் செய்ய வேண்டும்; வலுவடையச் செய்யவேண்டும்- அப்போது தான் திராவிட மக்களுக்கு உண்மையான விடுதலை- உண்மையான சுதந்திரம் கிடைக்கும்- பகுத்தறிவு பெறவேண்டும் மக்கள்- அவர்கள் யாருக்கும் அடிமைகளாக வாழக் கூடாது; சுதந்திரத்தோடு, சுயமரியாதையோடு வாழவேண்டுமென்ற அந்த உணர்வை ஊட்டிய இடம்- எங்களுக்கு ஈரோடு குடியரசு அலுவலகம் என்ற காரணத்தால், அந்தத் தாய்ப்பாலை அருந்திய எங்களுக்கு எவ்வளவுதான் அரசியலிலே மாறுபாடுகள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட, அந்த அடிப்படை உணர்விலேயிருந்து பதவிகளுக்காக எங்களை நாங்கள் என்றைக்கும் மாற்றிக் கொண்டதில்லை.

இங்கே தம்பி திருநாவுக்கரசு அவர்கள்கூட, ஆர்.எம்.வீக்கு பதவி கொடுங்கள் என்று சொன்னார். பதவிகளைப் பல பேருக்குக் கொடுக்கின்ற இடத்திலே இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பது, ஏதோ தட்டிக் கழிப்பதற்காகச் சொல்லுகின்ற வாசகம் அல்ல; அவர் பதவிகளைப் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல.

அந்தளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணி வேராக, அடிவேராக இந்த இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்- இன்றைக்கும் இருப்பவர் ஆர்.எம்.வீ. என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment