கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 29, 2011

சமச்சீர் கல்வி திட்டம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகு நிறுத்தி வைக்க அரசுக்கு அதிகாரம் உண்டா? - உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி


சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். சமச்சீர் கல்வி திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து கூறிய பிறகு அதை மீறி செயல்பட அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை மதுரவாயலை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி முன்பு 26.05.2011 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
மனுதாரர் வக்கீல் கே.பாலு:
சமச்சீர் கல்வி திட்டம், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட நல்ல திட்டம். அனைத்து மாணவர்களும் இதில் சமமான கல்வியை பெற முடியும். புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இதை ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது.
நீதிபதிகள்:
சமச்சீர் கல்வியை ரத்து செய்து அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா?
கே.பாலு:
அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பத்திரிகைகளுக்கு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன்:
ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோன்மணியன் சார்பாக சமச்சீர் கல்வி ரத்து எதிர்த்து தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம். எனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும். கடந்த ஆட்சியில் மாணவர் நலன் கருதி சமச்சீர் கல்வி கொண்டு வர உயர்நிலை கமிட்டி அமைக்கப்பட்டது. அது பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், சட்டத்தை மீறி அரசு செயல்பட முடியுமா? சமச்சீர் கல்வி சரியில்லை என அரசு கூறுவது தவறானது. 10ம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே இந்த பாட புத்தகங்களை படிக்க தொடங்கிவிட்டனர். ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும்போது இந்த திட்டத்தை கைவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும். எனவே, சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்:
இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்கக் கூடாது. ரூ.200 கோடி வீணாகிறது என கூறுவதை ஏற்கக் கூடாது. மாணவர்களின் நலன்தான் இதில் முக்கியம். சமச்சீர் கல்வி திட்டம் மாணவர்கள் நலனுக்கு எதிரானது. சமச்சீர் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதர மாநில மாணவர்களுடன் போட்டி போடுவது கஷ்டம். இதனால்தான் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இதில் புதிய கொள்கை முடிவு எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த அரசு விரும்பவில்லை. மாணவர்கள், பெற்றோர் விருப்பப்படி தரமான கல்வி பெற அவர்கள் விரும்பிய பள்ளி மற்றும் பாடதிட்டததை தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களை கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை பறிப்பதாகி விடும். மேலும் சமச்சீர் கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச கோர்ட்டில் வாபஸ்தான் பெறப்பட்டது. சிபிஎஸ்இ மாணவர்கள் தனிப் பாட திட்டததை படிக்கிறார்கள்.
மாணவர்கள் நலன் கருதி புதிய கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசு சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றி தான் புதிய கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தும். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்த அவகாசம் வேண்டும்.
கே.பாலு:
புதிய புத்தகங்களை அச்சடிக்க டெண்டர் விட தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடிக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அது வீணாகிவிடும்.
பி.வில்சன்:
ஒரு சட்டத்தை மீறி புதிய கொள்கை முடிவு மூலம் செயல்பட அரசுக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படவும் அரசுக்கு அதிகாரம் இல்லை.
நீதிபதிகள்:
சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த பிறகு அரசு புதிய கொள்கை முடிவு எடுக்க முடியுமா? ஒரு சட்டம் இருக்கும்போது அதை மீறி அமைச்சரவை கூட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க முடியுமா? பொதுமக்கள் மற்றும் மாணவர் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க அரசுக்கு அறிவுரை கூறுகிறோம்.
இந்த சட்டத்தின் நோக்கம் சரியாக உள்ளது. தலைசிறந்த கல்வியாளர்கள் கொடுத்த அறிக்கையை ஒதுக்கித் தள்ள முடியாது. பதில் மனுவில் சரியான காரணத்தை கூற வேண்டும். ஏற்கனவே ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் தயாரித்துள்ள நிலையில் அரசு கொள்கை முடிவு எடுத்து புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க வேண்டுமா என்பதை விளக்க வேண்டும்.
எங்களின் 3 கேள்விகளுக்கு அரசு விரிவான பதில் கூற வேண்டும். 1. சமச்சீர் கல்வி தொடர்பான சட்டம் இருக்கும்போது அதற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க முடியுமா? 2. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறிய பிறகு அதை மீறி அரசு செயல்பட அதிகாரம் இருக்கிறதா? 3. ரூ.200 கோடி செலவிடப்பட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட பிறகு மீண்டும் செலவழிப்பது சரியாகுமா? இந்த வழக்கில் வரும் 8ம் தேதி அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக விசாரணை நடந்தது.
அப்போது அரசுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment