கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

தேர்தல் வரப்போகிறது என்பதால் அரசு ஊழியர்கள் மீது ஜெயலலிதாவுக்கு திடீர் அக்கறை - முதல்வர் கருணாநிதி குற்றச்சாட்டு


தேர்தல் வரப்போகிறது என்பதால் அரசு ஊழியர்கள் மீது ஜெயலலிதாவுக்கு திடீர் அக்கறை வந்துள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி 26.02.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் அரசு அலுவலர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள் என்பதை அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறக்கலாமா? போக்குவரத்து ஊழியர்களை பற்றிக்கூட ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறாரே, அவர்கள் இடையே நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்புடைய சங்கத்திற்கு எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்பது மறந்து விட்டதா?
அரசு அலுவலர்களுக்காக தற்போது அறிக்கையிலே பாசாங்கு செய்து பரிந்து பேசும் ஜெயலலிதா ஆட்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்துப் பேசாதது மட்டுமல்ல, அதிரடிச் சட்டங்களைப் பிரயோகித்து அவர்களை அடக்கி ஒடுக்கவும், நிர்வாகிகளை கைது செய்யவும், ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்யவுமான அடக்குமுறைக் கொடுமைகளை ஏவி விட்டார். இந்த பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் தரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த துரைமுருகன் 25&10&2002 அன்று வற்புறுத்தினார். அப்போது ஜெயலலிதா ஜேக்டோ& ஜியோ அமைப்பின் சார்பில் தன்னைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் போராட்டக் குழுவினரிடம் போராட்டத்தை கை விட்டுவிட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுத்ததோடு தி.மு.க உறுப்பினர்களையும் வெளியேற்றினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி நம்பியமுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் காசிப்பாண்டியன் தீக்குளித்து மாண்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைப் பகுதி ஆசிரியர் அப்துல் சத்தார் அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து தற்கொலை செய்து இறந்தார். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் திமுக அறக்கட்டளை சார்பில் தலா ஸீ50 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் 10 நாட்களாக நடந்த போராட்டம் அதற்குமேல் தொடர முடியவில்லை. அரசாங்கம் தன் அராஜகப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வர மறுத்தது. போராட்டம் நடத்திய சங்கத் தலைவர்கள், அரசு அழைத்து பேச வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக கூறிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் ஜெயலலிதாவோ இனி பேச ஒன்றும் இல்லை, பணிக்குத் திரும்பாவிட்டால் ‘‘எஸ்மா’’ பாயும், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டினார். போராட்டம் நடத்திய நாட்களுக்கு ஊதியம் கிடையாது என்று கூறிய அரசு, அந்த நாட்களை விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமென்று அறிவித்தது. வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், சஸ்பெண்ட் உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என்றும், பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்றும் அளித்த உறுதிமொழியேற்று போராட்டம் கைவிடப்பட்டது.1997ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001ல் அதிமுக ஆட்சியில், சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் திமுக ஆட்சியில் பணி தரப்பட்டு வேலை பார்த்துக் கொண்டி ருக்கின்றார்கள். அவர்கள்தான் அதிமுக ஆட்சியிலே தாங்கள் வேலையில்லாமல் இருந்த 41 மாதங்களை பணியிலே இருந்ததாக கணக்கிலே கொள்ள கேட்டு நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.
அதற்கு முக்கிய காரணமே ஜெயலலிதா ஆட்சிதான். தலைமைச் செயலகத்திலிருந்து மதியம் வீட்டிற்கு நான் புறப்பட்டபோது, சாலைப் பணியாளர்களைப் பற்றிய செய்தி எனக்கு கூறப்பட்டவுடன், போலீஸ் அதிகாரிகளிடம் நான் சாலை பணியாளர் பிரதிநிதிகளை என்னைச் சந்திக்கச் செய்யுமாறு செய்தேன். அவர்களின் பிரதிநிதிகள் ஐந்தாறு பேரை என் இல்லத்திற்கே அழைத்து வந்தார்கள். அந்த ஐந்தாறு பேரிடம் அரசின் மூத்த அதிகாரிகளை அழைத்து பேசச் செய்தேன். பின்னர் அவர்கள் என்னைச் சந்தித்தபோது இப்படிச் செய்யலாமா என்று கூறிவிட்டு பின்னர் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளச் சென்றேன். இதைப்பற்றி எதுவும் தெரியாத ஜெயலலிதா விரைவில் தேர்தல் வரப்போகிறது என்றதும், அவசர அவசரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டுமென்று தெரிவித்துள்ளார். அவருடைய ஆட்சி காலத்தில் பேச மறுத்தவர், அந்த அரசு அலுவலர்களையெல்லாம் நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து கைது செய்து சிறையிலே அடைத்தவர், அவர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுத்தவர், தற்போது நான் என் வீட்டிற்கே அழைத்துப் பேசியதைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே அறிக்கை விடுகிறார் என்றால் அந்த அரசு அலுவலர்களே சிரிக்க மாட்டார்களா?
நேற்று முன்தினம் கூட, அதாவது 25&2&2011 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், வருவாய்த் துறை கிராம ஊழியர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம், நில அளவைத் துறை சங்கங்கள், அதன் கூட்டமைப்பு நிர்வாகிகள் தனித்தனியாக என்னை சந்தித்தனர்.
திமுக அரசு, அதன் அலுவலர்களுக்காக தொடர்ந்து செய்து வரும் நற்காரியங்களுக்காக நன்றி தெரிவித்தனர். அவர்களது எஞ்சியுள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்ததின்படி போராட்டங்களை திரும்பப் பெற்று பணிக்குத் திரும்புவதாக என்னிடம் கூறிச் சென்றார்கள். அரசு அலுவலர்களின் மிகப்பெரிய சங்கமான அரசு அலுவலர் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான இரா.சண்முகராஜன், அவரது சங்க நிர்வாகிகளும் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த செய்திகளையெல்லாம் மறைத்து அரசு அலுவலர்களின் அபிமானத்தைக் கொஞ்சமாவது பெற முடியாதா என்ற நப்பாசையில் ஜெயலலிதா அறிக்கை விட்டு, அந்த அலுவலர்கள் அதிமுக ஆட்சியில் பட்ட சிரமங்களையெல்லாம் நினைவுபடுத்தி, நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல நடந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா தனது அறிக்கையில் சத்துணவு ஊழியர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்த ஆட்சியில் 2 லட்சத்து 12981 சத்துணவு பணியாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக காலமுறை ஊதியம் அளித்ததோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டிருக்கின்றோம்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எஸ்மா, டெஸ்மா சட்டங்களை நீக்கி அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கியதோடு 1&1&2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு ஸீ5155 கோடியே 79 லட்சம் கூடுதல் செலவில் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஸீ11093 கோடி அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக மட்டும் அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதே திமுக ஆட்சியிலேதான்.
ஊதியக் கமிஷன் பரிந்துரையிலே சில முரண்பாடுகள் இருப்பதாக அரசு அலுவலர்களின் சங்கங்கள் தெரிவித்த நேரத்தில், அதனையேற்று 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஸீ200 கோடி கூடுதல் செலவிலே ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை 1&8&2010 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தோம். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி ஸீ163 கோடி செலவில் கூடுதல் சலுகைகள் அளித்ததின் வாயிலாக 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெற்றனர். அரசு அலுவலர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், சத்துணவு பணியாளர்களுக்காகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்காகவும், சாலைப் பணியாளர்களுக்காகவும் திமுக அரசு செய்துள்ள சாதனைகளையெல்லாம் பட்டியலிடுவ தென்றால் ஒருநாள் போதாது.
அதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயலலிதா தற்போது ஏதோ திடீரென்று அரசு அலுவலர்களிடம் அக்கறை கொண்டவரைப் போல அறிக்கை நாடகம் போட்டால் அதனை நம்பி ஏமாற இனியும் அவர்கள் தயாராக இல்லை. என்னையும் என் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும், விசாரணை நடத்த வேண்டுமென்றெல்லாம் புலம்புகின்றார் என்றால் அதற்கு காரணம் இன்னும் சில நாட்களில் அவர் மீதான ஸீ66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கிலே விசாரணை, தீர்ப்பு என்றெல்லாம் தன் மீது எங்கே சட்டத்தின் பாய்ச்சல் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம்தான். என்ன செய்வது? வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிக்கை யில் கூறி யுள் ளார்.

Saturday, February 26, 2011

மே, 1999 வரை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு 11.307 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதி : முதலமைச்சர் கலைஞர் ஆணை


1999ஆம் ஆண்டு மே மாதம் வரை அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய்ச் செலவில் 11,307 ஆசிரியர் பணியிடங்கள், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அனுமதித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 1991 92க்குப் பிறகு சுயநிதியில் இயங்கும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு அரசின் மானிய உதவியுடன் பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. சட்டமன்றப் பேரவையிலும் அரசின் கவனத்திற்கு இது கொண்டுவரப்பட்டது.


அதனடிப்படையில் இக்கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு, 31.5.1999 வரை மானிய நிதி உதவியின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட்ட, நிலை உயர்த்தப்பட்ட மற்றும் கூடுதல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்ட பகுதி மானிய உதவியின்றியும், முழுமையாக மானிய உதவியின்றியும் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படியும், அரசால் நிர்ணயிக்கப்படும் நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மானியத்துடன் பணியிடங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதைச் செயல்படுத்த ஏதுவாக, தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம் 1973க்கு திருத்தம் வெளியிடுவதற்கும் அரசு முடிவு செய்துள்ளது.


அரசு மானிய உதவியுடன் தோராயமாக 965 தனியார் பள்ளிகளுக்கு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) சுமார் 4,851 ஆசிரியர் பணியிடங்களும், மற்றும் 648 ஆசிரியரல்லாத பணியிடங்களும் ஆக மொத்தம் 5,499 பணியிடங்கள் 1.6.2011 முதல் அனுமதித்து முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ 131 கோடியே 13 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.


அதேபோல, 1990 1991 ஆம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 476 சிறுபான்மை மற்றும் 467 சிறுபான்மையரல்லாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் வரைமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்குட்பட்டு, கூடுதலாகத் தேவைப்படும் 6,456 ஆசிரியர் பணியிடங்களை 200 கோடி ரூபாய்ச் செலவில் அனுமதித்து முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.

இந்த இரண்டு ஆணைகளின் பயனாக, மொத்தம் 331 கோடி ரூபாய்ச் செலவில், 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.


1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்குப் பணியிடங்கள் அனுமதிப்பது தொடர்பாக அடுத்த கல்வியாண்டில் பரிசீலித்து தக்க முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அரியலூரில் புதிய மாவட்ட செசன்சு நீதிமன்றம் :

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு, புதிய மாவட்ட செசன்சு நீதிமன்றத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:


பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்தெடுக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட செசன்சு கோர்ட்டும், தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் முன்மொழிவு அனுப்பினார்.


அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோர்ட்டுகளில் 18 ஆயிரத்து 285 சிவில் வழக்குகளும், 3 ஆயிரத்து 73 கிரிமினல் வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்படும் 285 சிவில் வழக்குகள், 41 கிரிமினல் வழக்குகள், மகளிர் கோர்ட்டு வழக்குகள் போன்றவை அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட உள்ளன.


அரியலூரில் உள்ள மக்கள், பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டு மற்றும் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளுக்கு வந்து செல்வதில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை தனியாக நீதித்துறை மாவட்டமாகவும் மாற்றுவது அவசியமாகிறது.


இதற்காக அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட செசன்சு கோர்ட்டும், தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. தலைமை பதிவாளரின் இந்த முன்மொழிவை அரசு கவனமுடன்பரிசீலித்து அங்கு மாவட்ட செசன்சு கோர்ட்டை அமைக்க முடிவு செய்துள்ளது.


இந்த கோர்ட்டுகளுக்கு மரச்சாமான்கள், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் எந்திரம், கார், தொலைபேசி இணைப்பு ஆகியவற்றுக்காக ரூ.16.31 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இந்த மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு நீதிபதி உட்பட 23 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல்


முதல்வர் கருணாநிதி 26.02.2011 அன்று தலைமைச் செயலகத்தில் ரூபாய் 400 கோடி செலவில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கே.பி.பி.சாமி, ஜேகே.ரித்தீஷ், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்

திமுக சட்டத்துறை சார்பாக தேர்தல் நிதி


திமுக தலைவர் கருணாநிதியிடம் 26.02.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை சார்பாக அதன் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் நிதியாக முதற்கட்டமாக 15 லட்சத்து 2ஆயித்து, 376 ரூபாயினை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் - அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியினர் சந்திப்பு


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.என். அம்மாவாசி, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். சட்டமன்ற தேர்தல் குறித்து நடந்த இச்சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் - சிறுபான்மையினர் சமூக புரட்சி இயக்கத் தலைவர் சந்திப்பு



திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், சிறுபான்மையினர் சமூ புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் - சுபா. இளவரசன் சந்திப்பு


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 26.02.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழர் நீதிக் கட்சியின் தலைவர் சுபா.இளவரசன், தமிழர் நீதிக் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இச்சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பில் அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.